2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த ஐந்து ஸ்கூட்டர் மாடல்கள்

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைய புதிய ஸ்கூட்டர் மாடல்களும் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களும் வெளியிடப்பட்டது. அவற்றில் சிறந்த ஐந்து  ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 2017 ஆம் ஆண்டு மோட்டார் பைக்கின் விற்பனை அளவுக்கு ஸ்கூட்டர் விற்பனையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹோண்டா க்ரேஸியா

இளைஞர்களை குறிவைத்து இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்புறத்தில் பெரிய முகப்பு விளக்குகள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் பின்புறத்தில் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பார்ப்பதற்கு சற்று டியோ ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் முழுவதும் டிஜிட்டல் யூனிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, கருப்பு, சிவப்பு, வெள்ளை, மேட் ப்ளூ மற்றும் மேட் க்ரே என ஆறு வித வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 124.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.52 bhp (6500 rpm) திறனும் 10.54 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் மட்டும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக கிடைக்கும். இந்த மாடல் STD, Dlx மற்றும் அலாய் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.  இந்த மாடல் தான் தற்போது ஹோண்டா நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
Grazia STD - ரூ 60,277
Grazia Alloy - ரூ 62,208
Grazia Dlx - ரூ 64,649

ஹோண்டா கிளிக்

இந்த மாடலை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் வடிவமைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். அதிக பொருள் வைக்கும் இடவசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் 110 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 Bhp @7000rpm திறனையும் 8.94 Nm @5500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் CBS தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.  அதிக பாரம் ஏற்றி செல்ல வசதியாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் பெரிய பட்டன் கொண்ட டயர் மற்றும் அகலமான இருக்கை ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு , ப்ளூ க்ரே மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
CLIQ Standard - ரூ 44,739
CLIQ With Graphics - ரூ 45,235

சுசுகி லெட்ஸ்

சுசூகி நிறுவனம் லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலை கூடுதலாக புதிய இரட்டை வண்ணத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தற்போது கூடுதலாக ராயல் ப்ளூ/ மேட் கருப்பு, கிளாஸ் ஸ்பார்க்ள் கருப்பு மற்றும் ஆரஞ்சு/ மேட் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலில் 112.8 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது  8.5 bhp (7500rpm)   திறனும் 8.8 NM (6500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இந்த ஸ்கூட்டர் மாடல் ரூ 51,423 சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.
 

TVS ஜூபிடர் கிளாசிக் எடிசன்

இந்த மாடலில் கிளாசிக் மாடல் போன்ற தோற்றத்தை தருவதற்காக சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் சில குரோம் வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வட்ட வடிவ குரோம் பக்கவாட்டு கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  7.88 bhp (7500 rpm) திறனும்  8 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 65 முதல் 70 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

இந்த ஸ்கூட்டர் மாடல் ரூ 59,587 சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹோண்டா டியோ

தோற்றத்தில் பெரிய மாறுதல் என்றால் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிய பொசிஷனிங் லெட் விளக்குகள் தான். மற்றபடி புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் பல புதிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.  மேலும் இந்த மாடலில் புதிய இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், புதிய அகலமான இருக்கை, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு, காம்பி பிரேக் சிஸ்டம் மற்றும் மொபைல் சார்ஜிங் சாக்கெட் என ஏராளமான உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் அதே  109.2 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் BSIV மாசுக்கட்டுப்பாட்டு விதிக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது  8 bhp  திறனும்  8.9 Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, க்ரே மற்றும் ப்ளூ என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த ஸ்கூட்டர் மாடல் ரூ 52,093 சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.