ரூ 2.49 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடல்

ராயல் என்பீல்ட் நிறுவனம் கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடலை ரூ 2.49 லட்சம் ஆன் ரோடு விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 125cc எஞ்சின் கொண்ட ராயல் என்பீல்ட் RE/WD மாடலின் நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் உலகம் முழுவதும் வெறும் 1000 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் இந்தியாவில் 250 எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

125cc இரண்டு ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட ராயல் என்பீல்ட் RE/WD மாடலை இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் பேராசூட் மூலம் எதிரி நாட்டு எல்லைப்பகுதியில் இறக்கி பயன்படுத்தியது. தகவல் பரிமாற்றத்திற்கு இந்த பைக்குகள் பெரிதும் பயன்பட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஏர்போர்ன் பெகாசஸ் எனும் ராணுவப் பிரிவு தான் இந்த மாடலை பயன்படுத்தியது. ராயல் என்பீல்ட் RE/WD மாடல் 'Flying Flea’ என்றும் அப்போது அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடலில் RE/WD மாடலை கீழே இறக்க பயன்படுத்திய பேராசூட்டில் பொறிக்கப்பட்ட பறக்கும் குதிரையில் சின்னம் டேங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள், டூல் பாக்சில் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட் மற்றும் ஒவ்வொரு மாடலுக்கும் பிரத்தியேக எண்ணும் டேங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 499 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின்  27.2 bhp (5250rpm)   திறனும் 41.3 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் சிறப்பு பதிப்பு மாடல் ஆலிவ் க்ரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் சர்வீஸ் பிரவுன் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ 40000  அதிக விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.