தமிழக அரசுடன் இணைந்து மழையால் சேதமான வாகனங்களை பழுது பார்க்க இலவச முகாமை நடத்தும் TVS , யமஹா, பஜாஜ் மற்றும் ஐஷர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை இலவசமாக பழுது நீக்கி சர்வீஸ் செய்து தர சிறப்பு முகாம் வரும் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதில் TVS , யமஹா, பஜாஜ் மற்றும் ஐஷர் போன்ற நிறுவனங்கள் தமிழக அரசுடன் இணைந்து இந்த இலவச முகாமை நடத்துகிறது.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை சுட்டிக்காட்டி, எவ்விதக் கட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை தான் கேட்டுக்கொண்டதாகவும், இதனை ஏற்று அந்த நிறுவனங்கள் கட்டணமில்லாமல் பழுதி நீக்கி தருவதாக உறுதி அளித்ததையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களை வரும் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும் என்றும், இந்தச் சேவை முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.