இறுதியாக இந்தியாவில் வெளியிடப்பட்டது ஜீப் கிராண்ட் செரோக்கி, கிராண்ட் செரோக்கி SRT மற்றும் வ்ரேங்க்ளர் அன்லிமிடெட்

இறுதியாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நுழைந்தது. முதல் கட்டமாக கிராண்ட் செரோக்கி, கிராண்ட் செரோக்கி SRT மற்றும்  வ்ரேங்க்ளர் அன்லிமிடெட் போன்ற மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. பியட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அபார்த், மசராட்டி மற்றும் பெர்ராரி பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஜீப் பிராண்டும் அதில் இணைந்துள்ளது. ஜீப் நிறுவனம் உலக அளவில் SUV  மற்றும் ஆப் ரோடு வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். ஜீப் மாடல்கள் முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது.

வ்ரேங்க்ளர் அன்லிமிடெட் மாடலை ரூ.71.59 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஜீப் நிறுவனம். இந்த மாடல் பழமையான டிசைன் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஒரு ஆப் ரோடு மாடல் ஆகும். ஆப் ரோடு மாடல் என்றாலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ, தானியங்கி குளிரூட்டி என சிறந்த சொகுசு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 Bhp  திறனையும் 460 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 12.1 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு, வெள்ளை, கிரானைட், சில்வர், சிவப்பு மற்றும் ரைனோ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் தான் தற்போது விற்கப்படும் மாடல்களில் விலை குறைந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் செரோக்கி மாடலை ரூ.93.64 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஜீப் நிறுவனம். இந்த மாடல் ஜீப் நிறுவனத்தின் விலையுர்ந்த சொகுசு மாடல்களில் ஒன்று.  டச் ஸ்க்ரீன் ஆடியோ, தானியங்கி குளிரூட்டி என ஏராளமான சொகுசு வசதிகள் இந்த மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3 லிட்டர் V6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 243 Bhp  திறனையும் 570 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 12.8 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு, வெள்ளை, கிரானைட், சில்வர், சிவப்பு மற்றும் ப்ளூ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.

கிராண்ட் செரோக்கி SRT மாடலை ரூ.1.12 கோடி டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஜீப் நிறுவனம். இந்த மாடல் கிராண்ட் செரோக்கி மாடலின் கூடுதல் வசதிகள் பொருத்தப்பட்ட மாடல். இந்த மாடலில் 6.4 லிட்டர் V8 டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 475 Bhp  திறனையும் 630 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 5.5 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு, வெள்ளை, கிரானைட், சில்வர் மற்றும் சிவப்பு  என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.