2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த ஐந்து கிராஸ் ஓவர் மாடல்கள்

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைய புதிய மாடல்களும் மேம்படுத்தப்பட்ட மாடல்களும் வெளியிடப்பட்டது. அவற்றில் சிறந்த ஐந்து கிராஸ் ஓவர் மாடல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

மாருதி சுசூகி இக்னிஸ்

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜும் டீசல் என்ஜின் மாடல் 26.8 கிலோமீட்டர் மைலேஜும் கொடுக்கும். இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் ரூ. 4.63 லட்சம் முதல் ரூ. 8.15 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஹோண்டா WR-V

முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV  போன்ற  தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் சன் ரூப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் இந்த மாடலில் மட்டுமே சன் ரூப் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.5 Kmpl மைலேஜும்  டீசல் என்ஜின் மாடல் 25.5 Kmpl மைலேஜும் தரும்.

இந்த மாடல் ரூ. 7.77 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மாருதி சுசூகி செலிரியோ X

செலிரியோ மாடலின் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகளை கொடுத்து இந்த மாடலை வடிவமைத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம். இந்த மாடலில் முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, கருப்பு நிற B பில்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை, செலிரியோ மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, வெள்ளை, க்ரே, பிரவுன் மற்றும் ப்ளூ என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த என்ஜின்  68 bhp (6200 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல் 23.1Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இந்த மாடல் ரூ. 4.7 லட்சம் முதல் ரூ. 5.5 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மாருதி சுஸுகி S-கிராஸ்

இந்த மாடலில் வெளிப்புற தோற்றத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக முன்புற க்ரில் அமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய க்ரில் அமைப்பு பார்ப்பதற்கு சற்று கம்பீரமான தோற்றத்தை தருகிறது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐரோப்பாவில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.  ஆனால் இந்தியாவில் இந்த மாடல் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். மற்றும் கூடுதலாக மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த மாடலில் கிடைத்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்சனும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த  1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 89bhp (4000 rpm) திறனும்  200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 25.1 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.  இந்த மாடல் ப்ளூ, வெள்ளை, பிரௌன், சில்வர் மற்றும் க்ரே என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் ரூ. 8.49 லட்சம் முதல் ரூ. 11.29 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மஹிந்திரா KUV100 NXT

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய பனி விளக்குகள், புதிய பாடி கிளாடிங், புதிய ஸ்கிட் பிளேட், பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய பின்புற விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 15 இன்ச் மெஷின் கட் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய ஏழு இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் mFALCON எனும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் மாடல் 82bhp (5500 rpm) திறனும் 115Nm (3500-3600rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 25.32 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 77bhp (3750 rpm) திறனும் 190Nm (1750-2250rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.15 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் AMT ட்ரான்ஸ்மிஷனில் வெளியிடப்படவில்லை அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் ரூ. 4.43 லட்சம் முதல் ரூ. 7.44 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.