ரூ 78.83 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் வெலர்

டாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் இறுதியாக ரேஞ் ரோவர் வெலர் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ரூ 78.83 லட்சம் முதல் ரூ 1.37 கோடி வரையிலான ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மற்றும் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு இடையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் என மொத்தம் 25 வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.  இந்த மாடல் முதலில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடலும் பார்த்த உடனே தெரியுமளவு ரேஞ் ரோவர் மாடலின் டிசைன் தத்பரியத்தில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் நேவிகேஷன் உடன் கூடிய 10 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், எலெக்ட்ரானிக் அட்ஜர்ஸ்ட் இருக்கை என ஏராளமான சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4,803 மில்லிமீட்டர் நீளமும், 2,145 மில்லிமீட்டர் அகலமும், 1,665 மில்லிமீட்டர் உயரமும் மற்றும் 2,874 மில்லிமீட்டர் வீல் பேஸும் கொண்டது. 

இந்தியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் என்ஜின், 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும்  2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என மூன்று வித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் 2.0 லிட்டர் D180 இன்ஜெனியம் டீசல் என்ஜின் 177Bhp திறனையும் 430Nm இழுவைத்திறனையும்  வழங்கும். 3.0 லிட்டர் D300  டீசல் எஞ்சின் 296Bhp திறனையும் 700Nm இழுவைத்திறனையும்  வழங்கும். மற்றும் 2.0 லிட்டர் P250 பெட்ரோல் எஞ்சின் 246Bhp திறனையும் 400Nm இழுவைத்திறனையும்  வழங்கும். அனைத்து எஞ்சினும் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் லேன்ட் ரோவர் நிறுவனத்தின் டெர்ரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் ஆடி Q7, வோல்வோ XC90 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.