BS6 எஞ்சினுடன் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுசூகி ஆல்டோ 800

மாருதி சுசூகி நிறுவனம் BS6 எஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய ஆல்டோ 800 மாடலை ரூ 2.93 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய BS6 எஞ்சின், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மாருதி சுசூகி ஆல்டோ 800 மாடல் மூன்று வேரியன்ட்டுகள் மற்றும் ஆறு வித வண்ணங்களில் கிடைக்கும்.  மாருதி சுசூகி BS6 எஞ்சினுடன் வெளியிடும் இரண்டாவது மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தான் BS6 எஞ்சினுடன் கூடிய பலேனோ மாடலை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

  • ஆல்டோ 800 STD - ரூ 2.93 லட்சம் 
  • ஆல்டோ 800 LXI - ரூ 3.50 லட்சம் 
  • ஆல்டோ 800 VXI - ரூ 3.71 லட்சம் 

புதிய மாருதி சுசூகி ஆல்டோ 800 மாடலின் வெளிப்புறத்தில் புதிய கிரில், புதிய முகப்பு விளக்கு மற்றும் புதிய பம்பர் ஆகியவையும் உட்புறத்தில் புதிய இரட்டை வண்ண உட்புற வடிவமைப்பு, ப்ளூடூத் உடன் கூடிய ஸ்மார்ட் பிலே டாக் சிஸ்டம், புதிய ஸ்பீடோமீட்டர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மாடலில் கீலெஸ் என்ட்ரி சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, வெள்ளை, சில்வர், க்ரே, பச்சை மற்றும் ப்ளூ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் EBD உடன் கூடிய ABS, இரண்டு காற்றுப்பை, பின்புற பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் என பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதன் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 799 cc கொள்ளளவு கொண்ட 0.8 லிட்டர் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த எஞ்சின் BS6 மாசுகட்டுபாட்டு தரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இது 47.3 bhp (6000 rpm) திறனும் 69Nm (3500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல்  22.05kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.