ரூ 34.49 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஸ்கோடா கோடியாக் SUV

இறுதியாக ஸ்கோடா நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கோடியாக் SUV மாடலை இந்தியாவில் ரூ 34.49 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டைல் எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில்  மட்டும் கிடைக்கும். மேலும் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் ஏழு பேர் அமரும் வசதி கொண்ட SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கான்செப்ட் மாடல் 2016 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விசன் S கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடல் ஆகும். அலாஸ்காவில் வாழும் கோடியாக் எனும் கரடியின் பெயரிலிருந்தும் மேலும் கோடியாக் எனும் தீவின் பெயரிலிருந்தும் இப்பெயர் பெறப்பட்டுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

முகப்பு கிரில் மற்றும் வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. உட்புறத்தில் சூப்பர்ப் மாடலின் சில பாகங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அனைத்து விதமான சொகுசு உபகரணங்களும் கொண்ட மாடலாக இது இருக்கும். மேலும் இந்த மாடலில் ஒன்பது காற்றுப்பை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ப்லைன்ட் ஸ்பாட் டிடெக்சன் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 150Bhp திறனையும் 340Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஏழு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் DSG கியர் பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஸ்னோ என நான்கு வித டிரைவ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் EURO NCAP சிதைவு சோதனையில் ஐந்து ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சுனர், போர்டு எண்டவர் மற்றும் ஆடி Q3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.