மகிந்திரா TUV 300 மாடலின் ஸ்டீரிங் வீலின் படத்தை வெளியிட்டது மகிந்திரா

செப்டம்பர் 10 ஆம் தேதி மகிந்திரா TUV 300 மாடல் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மாடலின் ஸ்டீரிங் வீலின் படத்தை மட்டும் வெளியிட்டுள்ளது மகிந்திரா நிறுவனம். ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடு, சில்வர் பினிஷ் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல், இரட்டை இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை மகிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்த மாடல் சென்னையில் உள்ள மகிந்திரா ரிசர்ச் வேலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான  நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல்  புத்தம் புதிய  1.5 லிட்டர் mHawk80 டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் அதிக செயல்திறன் கொண்ட என்ஜினாக இருக்கும். மேலும் இந்த என்ஜின் 80 bhp திறனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.