1.99 லிட்டர் டீசல் என்ஜின்களை கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை வெளியிட்டது மகிந்திரா

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு டெல்லியில் தடை விதித்தது. இதனால் மகிந்திராவின் விற்பனை 2 சதவீதம் வரை பாதிக்கப்படும் என ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே விற்பனையை சரி செய்ய 1.99 லிட்டர் டீசல் என்ஜின்களை கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டிருந்தது . அதன்படி தற்போது 1.99 லிட்டர் டீசல் என்ஜின்களை கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை டெல்லியில் மட்டும் வெளியிட்டுள்ளது. 

மகிந்திரா XUV 500 மாடல் ரூ.11.58 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையிலும் ஸ்கார்பியோ மாடல் ரூ.9.67 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும். இந்த 1.99 லிட்டர் என்ஜின் தற்போது இருக்கும் 2.2 லிட்டர்  mHawk என்ஜினின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்ளளவு குறைந்த என்ஜின் ஆகும். இது 1997 cc  கொள்ளளவு கொண்டது. ஸ்கார்பியோ மாடலில் இந்த என்ஜின் 120 Bhp  திறன் மற்றும்  280 Nm  இழுவைதிறனை வழங்குமாறும் XUV 500 மாடலில் இந்த என்ஜின் 140 Bhp  திறன் மற்றும் 320 Nm  இழுவைதிறனை வழங்குமாறும் டியூன் செய்யப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் என்ஜினில் கிடைக்கும் அதே செயல்திறன் இதிலும் கிடைக்கும் என மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

இந்த 1.99 லிட்டர் என்ஜின் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே  கிடைக்கும்.  மகிந்திரா நிறுவனம் எதிர்காலங்களில் பெட்ரோல் என்ஜினில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.