அடுத்து ஒரு சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் SUV மாடல்கள்

இந்திய ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் நிறைய புதிய மாடல்களை தற்போது சோதனை செய்து வருகிறது, அவற்றில் அடுத்து சில மாதங்களில் இந்தியாவில் வெளியிடப்படும் SUV மாடல்களின் விவரங்களை இந்த செய்தி தொகுப்ப்பில் காணலாம்.

மஹிந்திரா S201:

மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலை மஹிந்திரா பிராண்டில் இந்தியாவில் வெளியிட உள்ளது அனைவரும் அறிந்தது, மேலும் அந்த மாடலை S201 குறியீட்டு பெயரில் மஹிந்திரா நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதன் தயாரிப்பு நிலை மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும். இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகளுடன் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 121bhp திறனையும் மற்றும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோ ஸ்போர்ட், ஹோண்டா WR-V மற்றும் டாடா நெக்ஸன் போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான SUV மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மஹிந்திரா அல்டுரஸ் G4:

மஹிந்திரா நிறுவனம் சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த மாடல் நவம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  சாங் யாங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரெக்ஸ்டன் மாடலுக்கும் இதற்கும் எந்த மாற்றமும் இல்லை, அதே மாடல் மஹிந்திரா நிறுவன பேட்சில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் வெளியிடப்பட்டால் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும். மேலும் இந்த மாடலின் பெயர் அல்டுரஸ் G4 என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் இந்த பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் முறையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தய மாடலுடன் ஒப்பிடும் போது இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 Bhp திறனும் 420Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மஹிந்திரா ரெக்ஸ்டன் மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் போர்டு எண்டவர் போன்ற பிரீமியம் SUV மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர்:

டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புத்தம் புதிய ஹரியார் SUV மாடலை படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடலின் உற்பத்தி தொடங்கப்பட்டதையும் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம். இந்த மாடலின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மாடலை ரூ 30000 முன்பணமாக செலுத்தி டாடாவின் அதிகாரப்பூர்வ இணையத்திலோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப்பிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா வின் இந்த புதிய SUV கான்செப்ட் மாடல் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று ஆகும். மேலும் இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய H5X கான்செப்ட் மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் மற்ற டாடா மாடல்களில் உள்ள க்ரில் அமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுமையாக கம்பீரமான SUV தோற்றத்தை தருகிறது.

இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் செயல்திறன் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இதன் தயாரிப்பு நிலை மாடல் ஐந்து மற்றும் ஏழு இருக்கை கொண்டதாக இருக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018 மாருதி சுசூகி எர்டிகா:

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எர்டிகா மாடலை 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த மாடல் கூடுதல் வசதிகளுடன் இந்த வருட இறுதிக்குள் நெக்ஸா ஷோரூம் வாயிலாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நெக்ஸா ஷோரூம் வாயிலாக வெளியிடப்படும் ஐந்தாவது மாருதி சுசூகி மாடல் ஆகும். இதற்கு முன் பலேனோ, இக்னிஸ், S-கிராஸ் மற்றும் சியாஸ் என நான்கு மாடல்கள் மட்டுமே நெக்ஸா ஷோரூம் வாயிலாக வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் டிசைர், இக்னிஸ், பலேனோ மற்றும் ஸ்விப்ட் மாடல்கள் தயாரிக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் வசதிகள் என இந்த மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் முந்தய மாடலை விட சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய க்ரில், புதிய பம்பர், புதிய பக்கவாட்டு வடிவமைப்பு, முகப்பு விளக்குகள், புதிய அலாய், புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு என முற்றிலும் ஒரு புதிய மாடல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புற வடிவமைப்பும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டேரிங் வீல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிய பிளாட்பாரம், புதிய உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு என முழுவதும் ஒரு புதிய மாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியாவில் இந்த மாடல் அதே அதே 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 95BHP (6000 RPM) திறனும் 130NM (4000RPM) டார்க் எனும் இழுவைதிறனும் டீசல் என்ஜின் 90BHP (4000 RPM) திறனும் 200NM (1750RPM) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. 

நிசான் கிக்ஸ்:

நிசான் நிறுவனம் இந்தியாவில் கிக்ஸ் SUV மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. நிசான் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தற்போது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில், தனது வியாபாரத்தை அதிகரிக்க இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் நிசான் நிறுவனத்தின் புதிய V-பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் டஸ்ட்டர் மாடலில் உள்ள எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசான் நிறுவனம் இந்திய மாடலின் உட்புறம் தொடர்பான படங்களை வெளிப்படுத்தவில்லை, எனினும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடல்களின் உட்புறம் சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உட்புறம் மற்றும் வெளிப்புறம் அனைத்திலும் இந்த மாடல் சிறப்பான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாடல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.