டொயோடா யாரிஸ் மாடலின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டது: மே மாதம் முதல் விநியோகம்

டொயோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக யாரிஸ் செடான் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ரூ 8.75 லட்சம் முதல் ரூ 14.07 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் விநியோகம் மே மாதம் முதல் தொடங்கப்படும். யாரிஸ் செடான் மாடலின் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ரூ 50,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  மேலும் இந்த மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசூகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Variant Transmission Price Transmission Price
J Manual Rs 8,75,000 CVT Rs 9,95,000
G Manual Rs 10,56,000 CVT Rs 11,76,000
V Manual Rs 11,70,000 CVT Rs 12,90,000
VX Manual Rs 12,85,000 CVT Rs 14,07,000

 

புதிய டொயோட்டா யாரிஸ் மாடல் கரோலா ஆல்டிஸ் மற்றும் கேம்ரி மாடல்களின் வடிவங்களை அதிகம் பெற்றுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய ஏர் டேம், ஸ்லீக் க்ரில், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய ஹாலோஜென் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின்புற LED விளக்குகள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவையும் உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணம் கலந்த இரட்டை வண்ண டேஷ் போர்டு, 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 காற்றுப்பை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS, நான்கு டிஸ்க் பிரேக், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த எஞ்சின் 107 PS @ 6000 rpm  திறனையும் 140 Nm @ 4200 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் மாடல் ஏழு ஸ்பீட் கொண்ட CVT ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் மேனுவல் மாடல் 17.1 Kmpl மைலேஜும் CVT மாடல் 17.8 Kmpl மைலேஜும் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.